NCET

தமிழ் மக்களுடைய அபிலாசைகளுக்கும் அமெரிக்காவினது நலன்களுக்கும் அமைவான ஓர் தீர்வைகாண முயல வேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களிடம் தமிழ்ஈழ மக்கள் அவை வேண்டுகோள்.

ஓஸ்லோ, 10.12.09

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்கள் சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றுக் கொள்வதற்காக கடந்த வியாழன்று(10.12.09) நோர்வேக்கு சமூகமளித்திருந்த போதே இவ்வேண்டுகோள் நோர்வே தமிழ்ஈழ மக்கள் அவையால் விடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்க அதிபருக்கும் மற்றும் ஊடகங்களுக்கும் விடுக்கப்பட்ட அறிக்கையிலே இக் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீ லங்கா அரசுடனான உறவை அமெரிக்க அரசு வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்காவின் செனட் சபையின் வெளிவிவகாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. இப்பரிந்துரையை அமெரிக்க செனட் சபை விடுத்ததன் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வை அமெரிக்கா ஓரங்கட்டியிருப்பதாக ஈழ மக்கள் அவை கருதுவதாக அவ் அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தமிழ்ஈழ மக்களுடன், தமிழ்ஈழ மக்கள் அவவையும், ஏனைய பல சர்வதேச அமைப்புக்களும் இணைந்தே ஒஸ்லோ மத்திய புகையிரத நிலையத்தில் தொடக்கி பாராளுமன்றத்தை நோக்கிய ஓர் கவனயீர்ப்பு பேரணியை நடாத்தியிருந்தனர்.

ஸ்ரீ லங்காவில் அரசியல் தீர்வு அவசியம் என தொடர்ச்சியாக அமெரிக்கா வலியுறுத்தி வந்திருந்ததோடு, இராணுவத் தீர்வின் ஊடாக ஸ்ரீ லங்காவின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும் வலியுறுத்தி வந்திருக்கிறது. மாண்புமிகு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களே, தாங்கள் தெரிவித்து வந்தது போலவே, ஸ்ரீ லங்காவின் தேசியப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வின் ஊடாக தீர்வை மேற்கொண்டதன் காரணமாக தமிழ் ஈழ மக்கள் பயங்கரமான மனித அவலத்தையும் மற்றும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். இத்தகைய மனித அவலத்திற்கு தமிழ் ஈழ மக்கள் உள்ளாக்கபட்டிருக்கும் தருணத்தில் ஒவ்வொரு நாட்டினதும் புவி சார் அரசியல் நிலை காரணமாக, தமிழ் ஈழ மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு மறைக்கப்பட்டிருப்பதோடு பின்தள்ளப்பட்டிருப்பதாகவும் ஈழ மக்கள் அவை கருதுவதாக நோர்வே ஈழ மக்கள் அவைத் தலைவர் மருத்துவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்களால் கைசாத்திடப்பட்ட அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


 

© www.ncet.no